Tuesday, December 18, 2012

18.12.2012 Tamil Readings

டிசம்பர் 18

முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள `தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். `யாவே சித்கேனூ' - அதாவது `ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன.

அப்போது, `எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார். மாறாக, `இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று கூறுவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 12-13. 18-19

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!
அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!
19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக!
அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும். அல்லேலூயா.



மத்தேயு 1:18-25
திருவருகை காலம்-மூன்றாம் வாரம், டிசம்பர் 18

நற்செய்தி வாசகம்


+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24


இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, �யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். �இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசு என்னும் மீட்பர் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம்.
மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment