Friday, December 28, 2012

புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா 28.12.2012
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7-8

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். -பல்லவி

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
மத்தேயு 2:13-18
மாசில்லா குழந்தைகள் திருநாள்


நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
மாசில்லாக் குழந்தைகள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
குழந்தை இயேசுவின் பொருட்டுத் தம் உயிரை இழந்து, மறைசாட்சிகளான மாசில்லாக் குழந்தைகளின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது குடும்பங்களிலுள்ள அனைத்துக் குழந்தைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா.
நாம் வாழும் நாள்கள் வியப்பான, விரைவான நாள்கள். இக்காலத்தில் குழந்தைகள் வெகு விரைவிலேயே தங்கள் மாசின்மையை இழந்துவிடுகின்றனரோ என்னும் சந்தேகம் நமக்கு எழுவது இயல்பே. இக்காலத்துக் குழந்தைகள் அறிவாற்றலிலும், திறன்களிலும், புரிந்துகொள்ளும் தன்மையிலும் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் பெரிய அளவில் அவர்கள்மீது ஏற்பட்டுள்ளது.
1. தொலைக்காட்சியினால் நல்ல பல செய்திகளை அவர்கள் பெற்றுக்கொண்டாலும், வன்முறை, பாலியல் வன்முறை போன்ற தவறான செய்திகளையும் தொலைக்காட்சியின் மூலம் இளம் வயதிலேயே நம் குழந்தைகள் பெற்றுவிடுகின்றனர்.
2. அத்துடன், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பழக்கமும் பல நாடுகளிலும் வெளிவராத செய்தியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
3. நமது கல்வி முறையும் இளம் வயதிலேயே அதிக வேலை தரும் களைப்பான, போட்டிகள் நிறைந்த, மன அழுத்தம் தரும் கல்வி முறையாக இருக்கிறது. இவை அனைத்துமே குழந்தைகள் தம் மாசின்மையை விரைவிலேயே இழக்கும் நிலைக்குக் காரணமாக இருக்கின்றன. பெற்றோரும், கல்வியாளர்களும், சமூக ஆhவலர்களும் இவை பற்றிச் சிந்தித்து, குழந்தைகளை இத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால். பெத்லகேமைச் சுற்றியிருந்த பகுதிகளில் தம் உயிரை இழந்த மாசில்லாக்  குழந்தைகளின் நிலை இனிமேலும் நம் இல்லங்களில் தொடரத்தான் செய்யும்.
மன்றாடுவோம்: குழந்தைகளைப் பெரிதும் நேசித்த அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். குழந்தைகள் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து, அவர்கள் ஊடகங்களாலும், கல்வி முறையாலும், மனச்சான்றில்லாத மனிதர்களாலும் தங்கள் மாசின்மையை இழந்துவிடாமல் காப்பாற்றுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment