Saturday, December 29, 2012

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள்




முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 3-11

என் பிள்ளைகளே, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம். அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள். அன்பிற்குரியவர்களே! நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல; நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளைதான் அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை. இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில் இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது. ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்புகொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை. தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 2-3. 5-6

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

5b ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன;
ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.
டிசம்பர் 29 லூக்கா 2:22-35
கிறிஸ்து பிறப்பு விழாவிற்குப் பின்
நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-35

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, இயேசுவின் பெற்றோர் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்யவேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
தலைப் பேறு ஆண்டவருக்கு அர்ப்பணம் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் என்னும் திருச்சட்டத்தின்படி இயேசுவின் பெற்றோர், குழந்தை இயேசுவைக் கோவிலுக்கு எடுத்துச்சென்று அர்ப்பணித்த நிகழ்ச்சியை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம். நமது குழந்தைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த நிகழ்வு நமக்குத் தருகிறது. பாரசீகச் சிந்தனையாளர் கலீல் கிப்ரான் குழந்தைகளைப் பற்றிக் கூறிய பின்வரும் சிந்தனை நம் கவனத்தை ஈர்க்கிறது. உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர். அவர்கள் கடவுளின் குழந்தைகள். உங்கள் வழியாக இறைவனால் உலகிற்குத் தரப்பட்டவர்கள்.எனவே, பெற்றோர் தம் குழந்தைகளை தமக்கென்று வளர்க்காமல், இறைவனுக்கு உரியவர்களாக, இந்த சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும். அன்னை மரி தம் தலைப்பேறான குழந்தையை ஆலயத்தில் அர்ப்பணித்து, இந்த உலகம் உய்வதற்காக அவரை ஈகம் செய்தார். அதுபோலவே, ஒவ்வொரு தாயும் தம் பிள்ளைகளை ஆன்மீக ரீதியில் மட்டுமல்ல, சமூக ரீதியிலும் அர்ப்பணிப்பு செய்யவேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அழைப்பு.
மன்றாடுவோம்: அனைவருக்கும் தந்தையாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற குழந்தைச் செல்வங்களுக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமது கொடைகள், உமக்கே உரியவர்கள் என்று உணர்ந்து உம்மிடம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கென்று நீர் என்ன திட்டம் வைத்திருக்கிறீரோ, அதன்படியே அவர்கள் வாழ அருள் தாரும். குழந்தைகளை எங்களுக்கென்று சொந்தம் கொண்டாடாமல், அவர்கள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் உரியவர்கள் என்ற உணர்வில் அவர்களை வளர்க்க எமக்கு வரம் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--: அருள்தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment