Monday, December 24, 2012

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !!!!
கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி
உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!
பணி. மரியதாஸ்
முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7


காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 96: 1-2. 2-3. 11-12. 13

பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

2 அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14


மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2:10-11 அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

டிசம்பர் 24 இரவுத் திருப்பலி - லூக்கா 2:1-14
கிறிஸ்து பிறப்பு பெருவிழா

நற்செய்தி வாசகம்�

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

வானதூதர் அவர்களிடம், �அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, �உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இம்மானுவேல் இறைவன் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியி;ன் விழா! இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இந்த விழாவின் இனிமையில் ஏராளமான சிந்தனைகள் நம் இதயத்தில் எழுகின்றன.
ஆனாலும், ஒரே ஒரு சிந்தனையை மனதில் இருத்தி இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
பிறக்கவிருக்கும் குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கின்றார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று நற்செய்தியாளர் விளக்கமும் தருகின்றார். ஆம், இதுதான் இன்றைய நற்செய்தி. நற்செய்தி நூலின் சுருக்கமும் இதுதான். இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதன் ;அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் இன்று நம் முன் தோன்றுகிறார். எனவே, விரக்தி அடையவேண்டாம். நம்பிக்கை இழக்க வேண்டாம். எத்தனை சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் வந்தாலும், காப்பாற்றவே முடியாத சூழலாக இருந்தாலும்கூட, நாம் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நம்பி;க்கையும், ஆறுதலும் தருகின்றது. கோபன்Nஉறகனில் நடக்கும் சுற்றுச்சூழல் மாநாடு உலகின் எதிர்காலம் பற்றிய பல அச்சங்களை எழுப்பியுள்ளது. யாருமே இந்த உலகைக் காப்பாற்ற முடியாது போன்ற பெரும் அவநம்பிக்கை அலைகள் அங்கே எழுகின்றன. இருப்பினும்கூட, மனித முயற்சிகளோடு இறைவனின் அருளும் இணையும்போது இந்த உலகைச் சுற்றுச்சூழல் மாசுகளிலிருந்து மட்டுமல்ல, பாவ மாசுகள், தன்னல மாசுகள், அடிமைத்தனங்கள், பிளவுகள், அமைதியின்மை அனைத்திலுமிருந்தும் நாம் காக்கப்பட முடியும். காரணம், இறைவன் நம்மோடு இருக்கின்றார். இந்த நம்பிக்கையோடு இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
மன்றாடுவோம்: எங்களுக்காக மனுவுருவெடுத்த அன்பின் குழந்தையே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் தனியாக இல்லை. இறைவன் எங்களோடு இருக்கிறார் என நம்பிக்கை தரப் பிறந்த தெய்வீக பாலனே, உமக்கு நன்றி கூறுகிறோம். உமது பிறப்பால் உலகின் அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கையின் ஒளி தோன்றுவதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்;.
-- அருள்தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment