Monday, December 17, 2012

Monday of the Third Week of Advent -TAMIL


டிசம்பர் 17

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள். யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4. 7-8. 17

பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்;
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக!
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. -பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டிருக்கும் அல்லேலூயா


நற்செய்தி வாசகம்


மத்தேயு 1:1-17
திருவருகை காலம்-மூன்றாம் வாரம், டிசம்பர் 17
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசுவின் தலைமுறை அட்டவணை !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
மத்தேயு நற்செய்தி இயேசுவின் தலைமுறை அட்டவணையோடுதான் தொடங்குகிறது. ஒரு மனிதரின் தலைமுறை வரிசையை எண்ணிப் பார்ப்பது, மத்தேயுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதுபோலவே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் முக்கியமானதாகத்தான் இருக்கிறது.
ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு. நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே, நாம் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறையும் அவ்வாறே வாழ வழிவகுப்போம்.
மன்றாடுவோம்: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடமாய் இருக்கிறீர் (திபா 90:1). எனவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் முன்னோருக்காக, முந்தின தலைமுறையினர் எங்களுக்கு விட்டுச் சென்ற நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம். வருங்கால தலைமுறைகளுக்காக நாங்கள் நிறைவான வாழ்வு வாழ எங்களுக்கு வரம் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment