Tuesday, December 11, 2012

Tuesday of the Second Week of Advent- TAMIL Full Text

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். �உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; �எதை நான் உரக்கக் கூற வேண்டும்?'' என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2. 3,10. 11-12. 13

பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். -பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது;
அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.



மத்தேயு 18:12-14

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், செவ்வாய் கிழமை

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------



''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக் கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மனிதர் தம்முள்ளே வேறுபாடுகள் கற்பித்துக்கொள்வதுண்டு; ஒருவர் மற்றவரைவிட மேலானவர் எனக் கருதுவதுண்டு. இவ்வாறு வேறுபடுத்தி ஒதுக்குகின்ற செயல் ஏற்கத்தகாதது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே; அனைத்து மனிதருக்கும் சமமான மாண்பு உண்டு. இந்த உண்மையை உணர்த்த இயேசு காணாமற்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் இருக்கின்ற மந்தையை விட்டு ஓர் ஆடு தவறிச் சென்றாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கச் செல்கின்ற நல்ல ஆயர் நம் கடவுள். தவறிச் சென்ற ஆடு கிடைத்துவிட்டால் ஆயருக்குப் பெருமகிழ்ச்சி. அதுபோலவே, எந்த ஒரு மனிதருமே தவறிப் போய்விடலாகாது என்பதே கடவுளின் விருப்பம். அப்படியே தவறிச் சென்றுவிட்டாலும் அவர்களை அன்போடு அணுகிச் சென்று, அவர்களை நல்வழிப்படுத்துவது இயேசுவின் சீடருக்குத் தரப்படுகின்ற பொறுப்பு.

-- வழிதவறிச் செல்வது எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் நடக்கக் கூடும். தவறிச் சென்றவர்களை இழிச்சொல் கூறிப் பழிப்பதற்குப் பதிலாக, அவர்களை நல்வழியில் கொணர்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். நல்வழியில் மனிதரைக் கொண்டுவருவதற்குக் கடவுளின் துணை எப்போதுமே உண்டு. ஏனென்றால் கடவுளை விட்டு அகன்றோரைத் தேடி மீட்கவே இயேசு வந்தார். அவருடைய அன்புக்கும் கரிசகனைக்கும் உரிய மனிதர்கள் தங்கள் தவற்றினைத் தயங்காது ஏற்றுக்கொள்வார்கள்; அதே நேரத்தில் தாங்கள் தவறிச் சென்ற வழியை விட்டுவிட்டு நேரிய வழியில் நடந்திட முன்வருவார்கள். கடவுளிடமிருந்து பிரிந்து செல்ல முயல்கின்ற மனிதர் சில வேளைகளில் அறியாமையால் அவ்வாறு செய்யக் கூடும். ஆனால் தங்கள் தவற்றினை உணர்ந்த உடனேயே அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்; கடவுளின் வழியில் நடந்திட விரைந்திட வேண்டும். தந்தையின் திருவுளம் மனிதர் உயர வேண்டும் என்பதும் மாண்புடையோராய் வாழ வேண்டும் என்பதுமே. ஆகவே, கடவுளின் விருப்பம் நிறைவேற வேண்டும் என நாம் கருதினால் அந்த விருப்பத்தை நம் விருப்பமாக ஆக்கிக் கொண்டு அதன்படி ஒழுகுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் சகோதர சகோதரிகளின் நலனை மேம்படுத்துவதில் நாங்கள் முனைந்து செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment