Thursday, January 3, 2013

சனவரி 3 ,2013



முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29-3: 6

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 3b-4. 5-6
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி
3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி
5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி
கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். -பல்லவி
திருப்பாடல் 98: 1- 6
"மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்"
இன்றும் நமது பதிலுரைப் பாடல் திருப்பாடல் 98தான். ஏன், நாளையும் இதே திருப்பாடல் 98ஐயே பாடப்போகிறோம்.
திருப்பாடல் 98 ஓர் இறைபுகழ்த் திருப்பாடல். அத்துடன், "அனைத்து உலகின் தலைவர்" எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பா யாவே இறைவனை அரசராகப் பாவிக்கும் ஒரு "யாவேயின் அரச மாண்புப் பாடல்" என்னும் உள்பிரிவைச் சேர்ந்தது.
இத்திருப்பாடல் நம்மை "ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள். மகிழ்ச்சியுடன், ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்" (98:4) என்று அழைக்கிறது. இந்த வரிகளைச் சிந்திக்கும்போது, இறைபுகழ்ச்சி பற்றிய சில அடிப்படைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்.
• பாடுவது- இறைபுகழ்ச்சியின் இனிமையான ஒரு வெளிப்பாடு. திருப்பாடல்கள் அனைத்துமே பாடப்படவேண்டியவை என்பதை நினைவில் கொள்வோம்.

• மகிழ்ச்சி - இறைபுகழ்ச்சி இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சி இருக்குமிடத்தில் இறைபுகழ்ச்சி இருக்கும். "உங்களுள் யாரேனும்... மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்" (யாக் 5:13) என்று புனித யாக்கோபு எழுதியுள்ளதை நினைவில் கொள்வோம்.
• ஆர்ப்பரிப்பு - "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (மத் 12: 34) என்னும் இறைவாக்கிற்கேற்ப உள்ளத்தில் இறைபுகழ்ச்சி பொங்கி வழிந்தால், அது வாயிலிருந்தும் ஆர்ப்பரித்துப் பொங்கிவருவது பொருத்தமானதே.
இன்று நம் செபத்தில் இந்த மூன்றும் இருக்கட்டும். ஒவ்வொரு முறை நாம் இறைபுகழ்ச்சியில் ஈடுபடும்போதும், பாடல், மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பிறப்பிலே உலகம் முழுவதும் விடுதலை காணச் செய்தீரே. நாங்கள் அக்களிக்கிறோம், ஆர்ப்பரிக்கிறோம், மகிழ்ந்து பாடி உம்மைப் போற்றுகிறோம். எங்களது இறைபுகழ்ச்சி எப்போதும் ஆர்ப்பரிப்புடன் கூடிய மகிழ்ச்சிப் பாடலாக அமைவதாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.
யோவான் 1:29-34
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்றார்.
32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது; "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.
33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் "தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்" என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். "
-------------------------
”உலகின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு”
”உலகின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு” இது திருமுழுக்கு யோவான் இயேசுவுக்குத் தரும் சாட்சியம். சாட்கியத் குரலாக அனுப்பட்பட்ட யோவான் இந்த சாட்சியம் சொல்ல பயமோ, தயக்கமமோ காட்டவில்லை. பாவம் என்பது உலகின் எல்லா தீமைகளும் ஒன்றிணைந்த தீமையின் மொத்தம். இந்த தீமையை இறைவனின் மாசற்ற ஆட்டுக்குட்டியான இயேசுதான் தன் அன்பின் தியாகப் பலியாயல் நீக்க முடியும். இந்த தியாகத்தின் மூலம்தான் இயேசு தரும் ஆவியின் வளமான நீருற்று, இறைவார்த்தை. அருட்சாதனங்கள் வழியாக அருள் வாழ்வாக திருச்சபையிலும பாய்ந்து அருள்வளம் சேர்க்கிறது. நாமும் இந்த அருள்வாழ்வில் இணைவோம்.
பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

No comments:

Post a Comment