Tuesday, January 1, 2013

Tamil Readings 01.01.2013

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28
அன்பிற்குரியவர்களே, இயேசு `மெசியா' அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர். தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும். உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக் கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள். ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3. 3-4
பல்லவி: உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி
3 உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி
திருப்பாடல் 98: 1- 4
"உலகெங்குமுள்ள அனைவரும்
நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்"
கிறிஸ்து பிறப்பின் மகிழ்வில் இன்னும் நாம் இருக்கிறோம். அந்த மகிழ்வின் ஒரு வெளிப்பாடாக இன்றைய பதிலுரைப்பாடல் திருப்பாடல் 98 அமைந்துள்ளது. அந்த மகிழ்வினால்தான் நாம் "உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்" என அறிக்கையிட அழைக்கிறது இன்றைய திருப்பாடல்.
இயேசுவின் பிறப்பு ஒரு விடுதலை விழா. "இயேசு" என்றாலே "மீட்பர், விடுதலை தருபவர்" என்றுதானே பொருள். அவரது வருகையால் நாம் விடுதலை பெற்றுக்கொண்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் அந்த விடுதலைச் செய்தியை அறிவிப்பதைப் பார்க்கிறோம். "நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்" என்று இயேசுவைச் சுட்டிக் காட்டுகிறார்.
நாமும் அத்தகைய மனநிலையில் இந்தத் திருப்பாடலைப் பாடுவோம். உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் முழு விடுதலை பெற்று, மகிழ்வுடன் ஆர்ப்பரிக்க அழைக்கின்ற இந்தத் திருப்பாடலை நமது செபமாக மாற்றுவோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பிறப்பிலே உலகம் முழுவதும் விடுதலை காணச் செய்தீரே. உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்களும் இந்த விடுதலைச் செய்தியைப் பிறருக்கும் நற்செய்தியாக அறிவிக்கும் தூதர்களாகத் திகழ்வோமாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
யோவான் 1:19-28

19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, "நீர் யார்?" என்று கேட்டபோது அவர், "நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார்.
20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
21 அப்போது, "அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க, அவர், "நானல்ல" என்றார் "நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும், அவர், "இல்லை" என்று மறுமொழி கூறினார்.
22 அவர்கள் அவரிடம், "நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
23 அதற்கு அவர், "'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது'என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே" என்றார்.
24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்
25 அவரிடம், "நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
26 யோவான் அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;
27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார்.
28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
-------------------------
இயேசுவே மெசியா
இயேசுவே மெசியா அவர்தாம் கடவுள் அனுப்பிய உலகின் மீட்பர். இது உன்மை! இயேசு மெசியா அல்ல என்பது பொய்! முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவானும், நற்செய்தியில் திருமுழுக்கு யோவானும் இதற்கு சான்று பகர்கின்றனர். இயேசுதான் மெசியா. அவர் நம்மை மீட்டார் என்று தூய ஆவியானவர் இறைவார்த்தை வழியாக நம்மில் சான்று பகர்கின்றார். இயேசுதான் மெசியா எனும் உண்மையை தினமும் நம் வாழ்வில் வாழ்ந்து சான்று பகரவே நான் ஒவ்வொருவரும் அழைக்கப்பபடுகிறோம்.
பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.
---------------------------------------------
நான் யார் ?
திருமுழுக்கு யோவானின் தன் உணர்வு (Self Awareness) மற்றும் தன்வெளிப்பாடு (Self Disclosure) இரண்டையும் இன்றைய நற்செய்தி வாசகம் நன்கு எடுத்துக்காட்டுகிறது. தாம் மெசியா அல்லர், மெசியாவின் முன்னோடி என்ற தன் உணர்வை யோவான் கொண்டிருந்தார். எனவே, அவர் தாழ்ச்சி உள்ளவராக, பெரிய எதிர்பார்ப்புகள் அற்றவராக, எளிமையாக வாழ முடிந்தது. அதைவிட முக்கியமாக, தாம் மெசியா அல்லர், அவரது முன்னோடியே என்பதைப் பிறரிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அறிக்கையிடவும் அவரால் முடிந்தது. மானிடரில் பெரும்பாலானோர் தமது உண்மையான தான்மையை (ளுநடக) மறைத்து, தாம் இல்லாத வேறொரு ஆளாக முகமூடி (ஆயளம) அணிந்துகொண்டு வாழ்கின்றனர் எனச் சொல்கின்றனர் உளவியலாளர். பிறரது பாராட்டை, அங்கீகரிப்பை; பெற வேண்டும் எனத் துடிப்போர்தாம் இத்தகைய முகமூடிகளை அணிந்துகொண்டு, நாடகம் ஆடுகின்றனர். யோவானுக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. ஒரு முன்னோடியாக, மிதியடி வாரை அவிழப்பவராக இருப்பதில் அவர் நிறைவு கொண்டார். இறையருளில் மகிழ்ந்தார்.
நாம் எப்படி? பிறரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக பொய்யான வேடங்கள் புனைந்து, முகமூடிகள் அணிந்து வாழ்கிறோமா? அல்லது நமது நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோமா?
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைப் பற்றி நன்கு அறிந்து, இயல்பாக, நேர்மையாக வாழும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-பணி. குமார் ராஜா

No comments:

Post a Comment