Tuesday, January 8, 2013

திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்
முதல் வாசகம்


திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.

நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 3-4. 7-8

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்;
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக!
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. -பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவி
திருப்பாடல் 72: 1-4, 7- 8
"ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்"
இன்றைய திருப்பாடல் ஓர் அரசத் திருப்பாடல். திபா 72க்குத் தலைப்பாக "அரசருக்காக மன்றாடல்" எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் "சாலமோனுக்கு உரியது" எனத் தரப்பட்டுள்ளது.
சாலமோன் அரசர் ஞானத்துக்குப் புகழ் பெற்றவர். தமது மக்களை நீதியோடு வழிநடத்துகின்ற ஞானத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெற்றவர் (1 அர 3: 5-13). ஒருவேளை அவரே இத்திருப்பாடலை இயற்றியிருக்கலாம். காரணம் "கடவுளே, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக. உம்முடையவரான எளியோர்க்கு நீதித் தீர்ப்பு வழங்குவாராக" என இத்திருப்பாடலின் முதல் இரண்டு அருள்வாக்குகளில் வாசிக்கிறோம், இன்றைய பதிலுரைப் பாடலாகவும் செபிக்கிறோம்.
திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடல் 72ம் மெசியா இயேசுவை நீதி வழங்கும் அரசராகக் காண்பதால், இன்றைய பதிலுரைப் பாடலாகத் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கிய நிகழ்ச்சியை வாசிக்கிறோம். ஆயரில்லா ஆடுகள் போலிருந்த பெருந்திரளான மக்கள்மீது இயேசு பரிவுகொண்டு நிகழ்த்திய இந்த அருஞ்செயலோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல்.
"எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக. ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக" (திபா 72: 4) என்னும் வரிகளை செபிக்கும்போது, இயேசுவின் இந்த அற்புதச் செயலை நினைவுகூர்ந்து, அவரே நீதியும், பரிவும் கொண்ட மெசியா என உணர்;ந்து நெகிழ்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்துக்கு நல்லதொரு முன் தயாரிப்பாக அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல்!
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் அற்புத நிகழ்விலே உம்முடைய நீதியையும், பரிவையும் கண்டு நன்றி செலுத்துகிறோம், ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.'' அல்லேலூயா.



மாற்கு 6:34-44
செவ்வாய்
நற்செய்தி வாசகம்�

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, �இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்'' என்றனர். அவர் அவர்களிடம், �நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்று பதிலளித்தார். அவர்கள், �நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், �உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்'' என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன'' என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இணையதள உறவுகளே
மிச்சம் மீதியை அள்ளிச் செல்ல கூடைகளும் தூக்குகளுடனும் உள்ளவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், உங் களிடம் என்ன இருக்கிறது, போய் பார்த்து எடுத்து வாருங்கள் என்றால் ஆளே நடமாட்டம் இருக்காது.
அடுத்தவன் கையை எதிர்பார்ப்பதும், இலவசத்ததைத் தேடி ஓடுவதும் வாழ்க்கையில் வளம் சேர்க்காது. அது வருமையைத்தான் வரவழைக்கும். எதற்கும் தீர்வு காண, ஆற்றலையும் ஆளுமையையும் நமக்குள் நிறைய வைத்துள்ளார். அங்கு சென்று அதை அடையாளம் காண்போம். முழுமையாக முதலில் அதைப் பயன்படுத்துவோம்.
ஒன்றும் இல்லையே என்று ஒப்பாரி வைத்து, கைகை அகல விரிக்காதே. உன் கை, கை விரல் ஐந்தும் முலதனம். அமைதியான ஆண்டவன் முன் அமர்ந்து, உனக்குள் சென்று பார். ஐந்து அப்பமும் இரண்டு மீனும் போல உன்னுள் நிறைய ஆற்றல் இருக்கும். அதைப் பயன்படுத்து. உன் பசியும் பிரச்சனையும் தீரும். பலருடைய பசியையும் பிரச்சனையையும் தீர்த்துவிடலாம்.
-ஜோசப் லீயோன்

No comments:

Post a Comment