Thursday, April 4, 2013

நற்செய்தி 04.04.2013

+லூக்கா  24: 35-48

அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

* * * * * * * * * *

லுhக்கா நற்செய்தியின் இனிய பகுதிகளில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகமாகக் காண்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை மிகவும் உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார் புனித லுhக்கா. இந்த நிகழ்ச்சியின் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையும், இரு சீடர்களில் கிளேயோப்பாவின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணும் விவிலிய அறிஞர்கள் சிலர் பெயர் குறிப்பிடப்படாத அந்த இரண்டாவது சீடர் லுhக்காவாக இருக்கலாம் என்றுகூட நினைக்கிறார்கள். எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு ஓர் இனிய, மகிழ்வு தரும் நிகழ்வு என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலி கொண்டாடும்போது, எம்மாவு அனுபவத்ததை நாம் மீண்டும் பெறலாம் என்பதே இன்றைய நற்செய்தி. திருப்பலியில் இறைவார்த்தை நமக்குப் பகிரப்படுகிறது. மறையுரையில் அது நமக்கு விளக்கப்படும்போது, நமது உள்ளம் பற்றி எரிய வேண்டும். பின்னர், அப்பம் பிட்கப்பட்டு, நாம் நற்கருணை அருந்தும்போது, நமது கண்கள் திறக்கப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவை நாம் தரிசிக்க வேண்டும். இதுவே நமது திருப்பலி அனுபவமாக நாள்தோறும் நிகழ்வதாக!

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் திருப்பலியில் இறைவார்த்தை வழியாகவும், நற்கருணை வழியாகவும் உம்மைச் சந்திக்கும் பேற்றினைத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் அகவிருள் அகற்றி அருளொளி தருவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

No comments:

Post a Comment